வந்தவாசி அருகே பிளாக்கில் மது விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அதே சமயம், பாதிரி-சளுக்கை கிராம எல்லையில் மதுக்கடையால் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்.ஐ. சங்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதிரி கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகே முட்புதரில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அதில் ஒருவரை போலீசார் பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சளுக்கை கிராமத்தை சேர்ந்த ஜோதி (வயது 50) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 116 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையை ஒட்டி, உத்திரமேரூர் செல்லும் சாலைக்கு அருகே டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. எந்த கட்டடங்களும், ஆள் நடமாட்டமும் இல்லாத பகுதியாக காணப்படும் அந்த இடம், மதுக்கடை மூலம், வெட்ட்வெளியில் மதுவிரும்பிகள் மிக சர்வசாதரணமாக அமர்ந்து குடித்துவிட்டு அங்கேயே மதுபாட்டில்களும், பிளாஸ்டிக் குப்பைகளையும் கொட்டி செல்கின்றனர்.
இதனால், பாதிரி கிராமம் - சளுக்கை கிராமம் எல்லையில் ஏராளமான கண்ணாடி பாடில்களும், பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கின்றன. அதுமட்டுமல்லாது, சட்டவிரோத செயல்களான, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, டாஸ்மாக் இயங்காத நேரங்களில் பிளாக்கில் மது விற்பனை நடைபெறுகிறது. அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லவே பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
காவல்துறை சட்டவிரோத செயல்களை இரும்புகரம் கொண்டு தடுப்பதோடு, அந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத, அச்சமூட்டும் சாலையாக மாறியிருப்பதை மாற்றி, மின்விளக்கு மற்றும் போலீஸ் ரோந்தை அதிகரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.