வந்தவாசி அருகே சுற்றுலா வேன் பள்ளத்தில் சிக்கி, குஜராத் பக்தர்கள் படுகாயம்

வந்தவாசி அருகே நிலைதடுமாறி ஓடிய வேன் பள்ளத்தில் சிக்கி குஜராத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்த பேரிடர் மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் வந்தனர். அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு மானாமதி கிராமத்தில் வேனை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வந்தவாசி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டனர். 

தென்னாங்கூர், சளுக்கை கோவில்களில் சாமி தரிசனம் செய்த அவர்கள் வந்தவாசியை அடுத்த பொன்னூர் கிராமத்தில் உள்ள மலைக் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். வேனை டிரைவர் மணிகண்டன் என்பவர் ஓட்டினார்.

வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் வெண்குன்றம் கிராமம் அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறியதில் சாலையை விட்டு இறங்கி மழைநீர் தேங்கிய பள்ளத்தில் சிக்கி நின்றது. இதில் வேனுக்குள் விழுந்தும் இருக்கைகளில் மோதியும் மூதாட்டி உள்பட 7 பேர் காயம் அடைந்து கூச்சலிட்டனர்.

அப்போது நாகப்பட்டிணம் பகுதியில் பேரிடர் மீட்பு பணிகளை முடித்துக்கொண்டு அரக்கோணம் ராஜாளி பேரிடர் மீட்பு மையத்துக்கு தேசிய பேரிடர் குழுவினர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

குஜராத் பக்தர்கள் வந்த வேன் விபத்தில் சிக்கியதை பார்த்த அவர்கள் உடனடியாக கீழே இறங்கி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். வேன் பள்ளத்தில் சிக்கி நின்றதால் உள்ளே இருந்தவர்களால் உடனடியாக வெளியில் வர முடியவில்லை. பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி அதில் இருந்த 7 பேரை பாதுகாப்பாக மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்தில் சிக்கிய வேன் சாய்ந்து விடாமல் இருக்க கயிறு மூலம் கட்டி இழுத்து நிறுத்தினர். இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 

இது தொடர்பாக அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Van Loses Control Near Vandavasi, 7 Gujarat Devotees Seriously Injured

நன்றி: தினத்தந்தி

புதியது பழையவை