திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் திறப்பு - வந்தவாசி பஸ் எங்கு நிற்கும் தெரியுமா..?

திருவண்ணாமலை புதிய பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாநகராட்சி திண்டிவனம் சாலையில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையத்தை கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையம் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி வரவேற்றார். இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு புதிய பஸ் நிலையத்தில் பஸ் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து புதிய பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

வழித்தடங்களின் விவரம்

திருவண்ணாமலை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை கிளாம்பாக்கம், அடையாறு, மாதவரம், புதுச்சேரி, விழுப்புரம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தண்டராம்பட்டு, தானிப்பாடி, மணலூர்பேட்டை ஆகிய மார்க்கங்களில் இயக்கப்படும் புறநகர பஸ்கள் அனைத்தும் இயக்கப்படுகிறது. 

மேலும் சேத்துப்பட்டு, மேல்மலையனூர், வந்தவாசி, போளூர், வேலூர், ஆற்காடு, ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், செங்கம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு, தருமபுரி, ஓசூர், திருப்பத்தூர், காஞ்சி, மேல்சோழங்குப்பம் ஆகிய மார்க்கங்களில் இயக்கப்படும் புறநகர் பஸ்கள் மற்றும் நகர பேருந்துகள் அனைத்தும் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திலிருந்து வழக்கம்போல் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதியது பழையவை