வந்தவாசியில் யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த சகோதரிகள்!

வந்தவாசியில் யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த சகோதரிகள்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission - UPSC)  இந்திய வன பணித் தேர்வில் (IFS) தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து, வந்தவாசியைச் சேர்ந்த இளம்பெண் மு.வெ. நிலாபாரதி சாதித்துள்ளார். அவரது அக்கா மு.வெ. கவின்மொழி சில நாட்கள் முன் இந்திய காவல் பணியில் (IPS) தேர்வாகினார். அவர் ஏற்கெனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission - TNPSC) குரூப் 2 தேர்வில் தேர்வாகி குன்றத்தூர் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தார்.

தங்கள் சாதனை குறித்து இருவரும் தெரிவிக்கும் போது, மீண்டும் ஒருமுறை தேர்வெழுதி ஐஏஎஸ் தகுதியில் கலெக்டர் ஆகவேண்டும் என்பது கனவு என்றனர். அவரது பெற்றோர் தெரிவிக்கும் போது, 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்த போதும், நீட் தேர்வு அறிமுகம் ஆகியிருந்த நிலையில், தங்கள் மகள்கள் மருத்துவர் ஆக முடியவில்லை என்றனர், மேலும், யுபிஎஸ்சி தேர்வுக்காக கல்லூரியில் வேளாண்மை படிப்பை தேர்ந்தெடுத்து, பின்னர் பொறுப்புடன் தயாரானதால் வெற்றியடைய முடிந்தது என்றனர்.

இருவரும் வந்தவாசி மண்ணில் இருந்து ஒரே நேரத்தில் அதிகாரப் பணிக்கு செல்வது பெருமைக்குரிய தகவல். வாழ்த்துகள் சகோதரிகளே!

இவர்களது பெற்றோர் பெயர், மு.முருகேஷ்-அ.வெண்ணிலா. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் கவிஞர்களாவர். மு.முருகேஷ் தற்போது சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அ.வெண்ணிலா, சென்னை ஆவணக் காப்பகத்தில் இணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு 3 மகள்கள். மூத்த மகள் கவின்மொழி. அடுத்த இருவரும் இரட்டையர்களான நிலாபாரதி, அன்புபாரதி. இவர்கள் 3 பேரும் வந்தவாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.

அதன்பின் 3 பேருமே இளங்கலை வேளாண்மை பட்டப் படிப்பை முடித்துவிட்டு, யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக சென்னையில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றனர். தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்திலும் இணைந்து பயிற்சியைத் தொடர்ந்தனர்.

இதற்கிடையில் கவின்மொழி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்று, குன்றத்தூர் நகராட்சி ஆணையராகப் பதவியேற்றார். பின்னர் அவரும், அவரது தங்கை நிலாபாரதியும் 2024-ம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றனர்.

நேர்காணலுக்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி வெளியானது. இதில் கவின்மொழி அகில இந்திய அளவில் 546-வது ரேங்கில் தேர்வாகி, ஐ.பி.எஸ். அதிகாரிக்கான பயிற்சியினைப் பெறவுள்ளார்.

இந்த நிலையில் நேற்று யு.பி.எஸ்.சி. வனப்பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், நிலாபாரதி, அகில இந்திய அளவில் 24-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஒரே வீட்டில் அக்கா ஐ.பி.எஸ்.அதிகாரியாகவும், தங்கை ஐ.எப்.எஸ்.அதிகாரியாகவும் தேர்வானதை எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.





புதியது பழையவை