வந்தவாசியில் கோரைப்பாய் பூங்கா ஏற்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எம்.பி. தரணிவேந்தன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தில் ஆரணி தொகுதி உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் பேசியதாவது,
தமிழகத்தில் ஆரணி தொகுதியில் உள்ள வந்தவாசி பகுதி கோரைப்பாய் நெசவு தொழில் புகழ் பெற்றதாகும். இங்கு விதவிதமான மற்றும் பல வண்ணங்களில் நெசவு செய்யப்படும் பாய்கள் மும்பை, டெல்லி, ெகால்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது.
குடிசைத் தொழிலாக இருந்த கோரைப்பாய் தற்பொழுது எந்திரத்தின் மூலம் குடும்பத் தொழிலாக செய்து வருகின்றனர். இதில் பாய்கள், சால்வைகள் மற்றும் கோரைப்புல்லில் இருந்து தயாரிக்கப்படும். பிற பொருட்களும் அடங்கும். ‘டிரேட் இந்தியா’ பட்டியல்களின்படி, பல சிறிய அளவிலான கைவினைஞர்கள் மற்றும் குடும்பத்தினரால் நடத்தப்படும் பட்டறைகளை கொண்டு கோரைப்பாய் பின்னப்படுகிறது.
வந்தவாசியை தலைமை இடமாகக் கொண்டு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உள்ளனர். பொதுவாக ஒரு பாயின் விலை ரூ.100 முதல் ரூ.250 வரையிலான விலையில் கோரைபாய் விற்பனை செய்கின்றனர். இந்த பொது தேவையின் காரணமாக வந்தவாசி பகுதியில் கோரைப் பாய்க்கு என பூங்கா அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.