தமிழ் நாடு முழுவதும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர முறை திருத்தம் இன்று தொடங்குகிறது. கணக்கெடுப்பு படிவத்தை திரும்ப வழங்காதவர்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது என்று திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.
அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர முறை திருத்தம் இன்று தொடங்குகிறது. இறந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் தற்போதைய முகவரியில் வசிக்காமல் நிரந்தரமாக வெளியூர் சென்ற வாக்காளர்கள், வாக்காளரின் பெயர் ஒருமுறைக்கு மேல் பதிவு பெற்ற வாக்காளர்கள் இது போன்ற வாக்காளர்களை கண்டறிவதே இதன் முக்கிய பணியாகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது 21 லட்சத்து 21 ஆயிரத்து 902 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தனித்துவமான கணக்கெடுப்பு படிவம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் அந்தந்த பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடு தோறும் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து சிறப்பு தீவிர முறை திருத்த பணி குறித்து விவரித்து தனித்துவமான வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தினை வழங்கி விவரங்களை சேகரிக்க உள்ளனர். இதில் 2,391 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.
வாக்காளர்கள் அனைவரும் படிவத்தில் கேட்கப்படும் விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அந்த படிவத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமே திரும்ப வழங்க வேண்டும். அத்துடன் வேறு எந்த ஆவணங்களும் இணைக்க தேவையில்லை.
அதன்பின்னர் வருகிற டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் தன் படிவத்தினை பூர்த்தி செய்து திரும்ப வழங்கவில்லை என்றால் அவரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. எனவே அனைத்து வாக்காளர்களும் படிவத்தினை பூர்த்தி செய்து தவறாமல் திரும்ப வழங்க வேண்டும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட அன்று முதல் வாக்காளர்களிடம் இருந்து வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு புதிதாக வாக்காளர் பெயர் சேர்க்க, பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரில் திருத்தம் செய்ய, நீக்கம் செய்ய படிவங்கள் ஜனவரி மாதம் 8-ந் தேதி வரை பெறப்படும்.
கணக்கெடுப்பு காலத்தில் பெறப்பட்ட படிவங்கள் மீதான முடிவுகள் ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை உள்ள காலகட்டங்களில் எடுக்கப்படும். பின்னர் பிப்ரவரி மாதம் 7-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
எனவே திருவண்ணாமலை மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் இந்த சிறப்பு தீவிர முறை திருத்த பணியில் பங்கேற்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

