பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகளில் 33 ஆயிரம் பேர் தனித்துவ அடையாள எண் (Agri Stack) பெற பதிவு மேற்கொள்ளவில்லையாம். அதனால், பதிவேற்றம் செய்யாதவர்கள் 21-வது தவணை நிதி உதவி 2000 ரூபாய் பெற இயலாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநில மற்றும் மத்திய அரசின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றை பெற விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது. விவசாய அடையாள எண் மூலம் வேளாண் பயிர்க்கடன், விவசாய இடுபொருட்கள், மழை மற்றும் வறட்சி நிவாரணம், வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய உதவி திட்டங்கள் இதர துறைகளின் உழவர் நல திட்டங்கள் ஆகியவற்றை பெற முடியும். இனிவரும் காலங்களில் அரசு திட்டங்களில் பங்கு பெற்று பயன்பெற விவசாய அடையாள எண் முக்கியமானதாகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை அலுவலர்களால் தனித்துவ அடையாள எண் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பொது இ சேவை மையங்கள் மூலமாகவும் இப்பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகள் பதிவு மேற்கொள்ள பட்டா, சிட்டா, ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசியோடு சென்று பதிவு மேற்கொள்ள வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 761 விவசாயிகள் உள்ளனர். இவர்களில் இதுவரை 1 லட்சத்து 87 ஆயிரத்து 698 விவசாயிகள் மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளனர்.
பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகளில் 33,063 பேர் இதுவரை தனித்துவ அடையாள எண் பெற பதிவு மேற்கொள்ளவில்லை. பதிவேற்றம் செய்யப்படாத பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் இனி வரும் காலங்களில் பி.எம்.கிசான் 21-வது தவணை நிதி உதவி பெற இயலாது.
மேலும் அனைத்துத்துறை நலத்திட்ட உதவிகளை பெற பதிவேற்றம் செய்யாத அனைத்து விவசாயிகளும் தங்கள் நில உடைமைகள் விவரங்களை உடனடியாக பதிவேற்றம் செய்து தனித்துவ அடையாள எண் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பதிவேற்றத்திற்கு கட்டணம் ஏதுமில்லை.

