கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரிக்கும்.. மதிய வேளையில் வெளியில் செல்வதை தவிருங்கள்.. மாவட்ட ஆட்சியர் அறிவுரை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் மதிய வேளையில் வெளியில் செல்வதை தவிர்த்து கவனமாக இருக்கும்படி ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு விவரம்:

  • நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். 
  • தாகம் ஏற்படாமல் இருந்தாலும் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 
  • பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். 
  • தேநீர், காபி, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்து எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் அருந்த வேண்டும்.
  • பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.
  • துரித உணவுகள் மற்றும் காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம். 
  • முடிந்த வரை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 
  • நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். 
  • மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். தேவை எனில் துணிகளை ஈரப்படுத்தி பயன்படுத்தலாம். 
  • வெளியில் செல்லும்போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும்.
  • இரவில் ஜன்னல்கள் திறந்து காற்றோட்டத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். 
  • மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும். 
  • வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் கடினமான வேலைகளை செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • தனியே வசிக்கும் முதியவர்கள் உடல்நிலையை தினமும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். 
  • முதியவர்கள் அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • மதிய நேரத்தில் கண்டிப்பாக வெளியில் செல்வதை தவிர்க்கவும்.
  • கால்நடைகளை நிழல் தரும் கூரைக்கு அடியில் கட்டவும். அவசியமாக போதுமான அளவு தீவனம் மற்றும் தண்ணீர் கொடுக்க வேண்டும். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டும். 
  • பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து நீர் கொடுக்க வேண்டும்.
  • மேலும் பருவநிலை மாற்றங்களினால் இவ்வாண்டு கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் வயர்கள் உருகி சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு அதில் தீப்பொறியால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே பயன்பாட்டில் உள்ள மின்கம்பி மற்றும் மின் சாதனங்களின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • மேலும் மாடி வீடுகளில் மேல் கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள இரும்பு சூடாகி மின்விசிறி, டியூப்லைட் கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன.
  • எனவே கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் வீடுகளில் தண்ணீரை இயன்றவரை அதிக அளவில் சேகரித்து வைத்து கொள்ளலாம்.
  • கேஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. 
  • விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அணைத்து விட வேண்டும். 
  • மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும்.


புதியது பழையவை