சென்னை ஊரப்பாக்கத்தில், டாக்டர் ஆகும் கனவில் இருந்த நீட் பயிற்சி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் வந்தவாசியை அடுத்த ராயனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ராயனந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் - தேவி தம்பதியர், தற்போது குடும்பத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். செல்வராஜ், சிறிய அளவில் பேக்கரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மூத்த மகள் தேவதர்ஷினி கடந்த 2021-ம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு தொடர்ச்சியாக 3 முறை நீட் தேர்வு எழுதி உள்ளார். அதில் போதிய அளவு மதிப்பெண் கிடைக்காததால் 4-வது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தார். இதற்காக அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் நீட் பயிற்சி அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். 4-வது முறை தேர்வு எழுதி போதிய மதிப்பெண் பெறாமல் போனால் என்ன செய்வது என்று நினைத்து மன வருத்தமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதற்கு அவரது தந்தை எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்று தைரியம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மாணவி தேவதர்ஷினி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இதை பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தேவதர்ஷினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிளாம்பாக்கம் போலீசார் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிளாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் தேவதர்ஷனியின் உடல் சொந்த ஊரான ராயனந்தல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள், பெற்றோர்கள் கதறி அழுதனர்.
நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக மாணவி தேவதர்ஷினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவி தேவதர்ஷினி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.