கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.ரவி ஜெயராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- “தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 பிரிவு 22ஏ-ன் படி அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் அமர்வதற்கு ஏதுவாக இருக்கை வசதி அமைத்து தரப்பட வேண்டும் என வரையறை செய்யப்பட்டுள்ளது.
எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உரிமையாளர்கள் தங்கள் கடைகள் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் அமர்வதற்கு ஏதுவாக இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
ஆய்வின் போது இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்படாதது தொடர்பாக முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் மீது தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-ன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”