வந்தவாசி முன்னாள் எம்.எல்.ஏ. குணசீலன் காலமானார் - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வந்தவாசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக நிர்வாகியுமான வே. குணசீலன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவரது சொந்த ஊர் செய்யார் வட்டம், அனக்காவூர் அடுத்த செய்யாமூர் பகுதி ஆகும். மறைந்த குணசீலன் உடலுக்கு பொதுமக்கள், அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



இபிஎஸ் இரங்கல்

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

அதில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், அனக்காவூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளரும், வந்தவாசி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செய்யாமூர் வே. குணசீலன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் திறம்பட ஆற்றிய ஆரம்ப கால கழக உடன்பிறப்பு அன்புச் சகோதரர் குணசீலன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

திமுக அஞ்சலி:

இதனிடையே, திமுக சார்பில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தரணிவேந்தன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


யார் இந்த குணசீலன்? 

வந்தவாசி தொகுதி திமுக கோட்டை என்றே சொல்லலாம். பலமுறை திமுக மட்டுமே வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆவாக இருந்துள்ளனர். அந்த வகையில் 6 முறை திமுகவும், 4 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை வீழ்த்தி, அதிமுக ஆட்சியை பிடித்து முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். அப்போது, வந்தவாசி தொகுதியில் திமுகவின் கோட்டை என்கிற நிலையைத் தகர்த்து வெற்றி பெற்றவர் செய்யாமூர் வே. குணசீலன்.

அந்த சமயத்தில், வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை.


வந்தவாசி தொகுதி:

வந்தவாசி தொகுதி 1952-ம் ஆண்டும், 1957-ம் ஆண்டும் இரட்டை உறுப்பினர்களை கொண்ட பொதுத் தொகுதியாக இருந்தது. பின்னர் 1962-ல் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது.

1962-க்கு பிறகு கடந்த தேர்தல்களில் தி.மு.க. ஒரு இடைத்தேர்தல் உள்பட 9 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ், பா.ம.க. தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. 

1951 சோமசுந்தர கவுண்டர்- பொதுநலகட்சி

1957 ராமசந்திர ரெட்டி- காங்கிரஸ்

1962 முத்துலிங்கம்- தி.மு.க.

1967 முத்துலிங்கம்- தி.மு.க

1971 ராஜகோபால்- தி.மு.க.

1977 முனுசாமி- அ.தி.மு.க.

1980 குப்புசாமி- அ.தி.மு.க.

1984 ஆறுமுகம்- காங்கிரஸ்

1989 தனராசு- தி.மு.க.

1991 சி.கே. தமிழரசன்- அ.தி.மு.க.

1996 பாலா ஆனந்தன் - தி.மு.க.

2001 முருகவேல் ராஜன்- பா.ம.க.

2006 எஸ்.பி. ஜெயராமன்- தி.மு.க.

2009 (இடைத்தேர்தல்) எஸ்.பி.ஜெ.கமலக்கண்ணன் - திமுக

2011 வே. குணசீலன்- அ.தி.மு.க.

2016 அம்பேத்குமார்- தி.மு.க.

2021  அம்பேத்குமார்- தி.மு.க.

புதியது பழையவை