வந்தவாசியில் அரசு பேருந்து நடத்துனர்களிடம், நூதன முறையில் வசூல் வேட்டை செய்த போலி போக்குவரத்து செக்கிங் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில், ஒரு நபர் அரசு பேருந்தில் செக்கிங் இன்ஸ்பெக்டர் என்று கூறி, அரசு போக்குவரத்து நடத்துனர்களிடம் டிக்கெட் விற்பனை சோதனை செய்வது போல், தலா ஒரு பேருந்துக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூல் செய்துள்ளார்.சந்தேகம் அடைந்த நடத்துனர்கள் வந்தவாசி போக்குவரத்து பணிமனையில் உள்ள கிளை மேலாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவம் இடத்திற்குச் சென்று செக்கிங் இன்ஸ்பெக்டர் உடையில் இருக்கும் நபரை அழைத்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனிடையே, போலீசாரை அழைத்து வந்து விசாரணை செய்ததில் அந்த நபர் பெயர் இளங்கோவன் என்றும், போலி செக்கிங் இன்ஸ்பெக்டர் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து இளங்கோவனை தெற்கு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பகுதிகளில் செக்கிங் இன்ஸ்பெக்டர் போல் போலியாக நடித்து, தினமும் 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளில் தலா 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை என 2000 ரூபாய்க்கு மேல் பணம் வசூல் செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் இவர் ஏற்கனவே மூன்று முறை கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார் என்றும் தெரியவந்தூள்ளது. போலீசார் இளங்கோவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட இளங்கோவன், திருவண்ணாமலை மாவட்டம் சேர்ந்த ஆரணி தாலுக்கா கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
சில ஆண்டுகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த நபர், குடும்பத்துடன் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழக செக்கிங் இன்ஸ்பெக்டர் உடை அணிந்து கொண்டு சேத்துப்பட்டு, உத்திரமேரூர், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகளை நிறுத்தி நடத்துனர்களிடம் சோதனை செய்வது போல் பணம் வசூல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல தற்போது வசமாக மாட்டிக்கொண்டார்.