பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகப்பிற்படுத்தப்பட்டோர் (MBC), சீர்மரபினர் மாணவர்கள் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் நிபந்தனைகளின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் ஆண்டு தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எந்தவித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2024-2025-ம் கல்வி ஆண்டில் இந்த கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் University Management Information System என்ற இணையதளம் மூலம் வரவேற்க செயல்பாட்டிற்கு வந்துள்ளது. கல்வி உதவித்தொகைக்கு மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகை விண்ணப்பம் சமர்பிக்க கடைசி நாள் வருகிற 28-ந்தேதியாகும்.
ஏற்கனவே கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற்று 2024-2025-ம் ஆண்டில் 2,3 மற்றும் 4-ம் ஆண்டு பயின்று வரும் புதுப்பித்தல் மாணவர்கள் கல்வி உதவித்தொகை புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அம்மாணவர்களுக்கு கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
நடப்பு கல்வியாண்டில் (2024-2025) புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மற்றும் சென்ற ஆண்டில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணவர்கள், தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி விவரங்களை மாணவர்களுக்கு தெரிவித்து பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.