முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று (27-1202025) வருகை தர உள்ளார். இதில், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார். அதில் ஒரு பகுதியாக மாலை 6 மணி வாக்கில் வந்தவாசியில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி சிலையையும் திறந்து வைக்கிறார்.
வேளாண் கண்காட்சி:
காலை 10 மணியளவில் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்து பார்வையிட்டு சிறப்புரையாற்றுகிறார்.
நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் எந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உணவு பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
கண்காட்சியில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், விதைச்சான்று, அங்கக சான்று, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், கால்நடை பராமரிப்பு பல்கலைகழகங்கள் போன்றவை மூலம் 200-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் வகையில் கருத்து விளக்க கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட உள்ளது. தொழில்நுட்ப கருத்தரங்கங்கள் மற்றும் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.
அரசு நலத்திட்ட உதவிகள்:
அதன்பின்னர் திருவண்ணாமலை மலப்பாம்பாடியில் கலைஞர் திடலில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ. 631 கோடியே 48 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற 314 பணிகளை திறந்து வைத்து, ரூ.63 கோடியே 74 ஆயிரம் மதிப்பில் 46 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 194 பயனாளிகளுக்கு ரூ.1,400 கோடியே 57 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள மக்கள் குறைதீர்வு மையம் மற்றும் இதர அலுவலக கட்டிடங்கள், திருவண்ணாமலை புதிய பஸ் நிலையம், புதிய காய்கறி, பூ மற்றும் பழச்சந்தை வளாகம், திருவண்ணாமலை மாநகரத்திற்கான குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள், அருணாசலேஸ்வரர் கோவிலில் போலீஸ் நிலையம், கஸ்தம்பாடியில் இலங்கைத் தமிழர்களுக்கான 280 புதிய வீடுகள், ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளுடன் கூடிய அரசு மாதிரி பள்ளிக் கட்டிடம், நான்கு வழி சாலைகளாக விரிவுபடுத்தப்பட்ட திருவண்ணாமலை-அரூர் சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை, காஞ்சிபுரம்- திருவத்திபுரம் சாலை, சுகாதார நிலையங்கள், நூலகங்கள் உள்ளிட்ட 314 திட்டப்பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
கருணாநிதி சிலைகள் திறப்பு:
பின்னர் மாலை 4.30 மணிக்கு மேல் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கலசபாக்கம், வந்தவாசி (6 மணி - 7 மணி வாக்கில்), செய்யாறு ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலைகளை நேரில் சென்று திறந்து வைக்கிறார்.
பின்னர் செய்யாறில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார்.
முதலமைச்சரின் பயணம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
Tamil Nadu Chief Minister M. K. Stalin unveils the statue of former Chief Minister M. Karunanidhi in Vandavasi today.

