திருவண்ணாமலை அருணாசலேவரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மகா தீபம் வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) ஏற்றப்படுகிறது.
மகா தீபத்தன்று, வந்தவாசி உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்), அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் விடுமுறை அனுபவிக்கும் அனைத்து அலுவலகங்களும் வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) இயங்கும். மேலும் வருகிற 3-ந் தேதி அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களை கொண்டு செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

