திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மீசநல்லூர் கிராமத்தில், பெயிண்ட் அடிக்க பயன்படுத்தப்படும் தின்னர் திரவத்தை குடித்த அங்கன்வாடி சிறுவர்கள் 3 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் சுமார் 25 மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வர்ண பூச்சு மென்மையாகவும், சீராகவும் இருப்பதற்காக பெயிண்டில் கலக்கப்படும், தண்ணீர் போல் இருக்கும் ‘தின்னர்’ என்ற திரவத்தை வர்ணம் அடிக்கும் தொழிலாளர்கள் அங்கன்வாடி மைய கட்டிடத்தில் வைத்திருந்தனர்.
அங்கன்வாடி மையத்தில் படித்து கொண்டிருந்த மாணவர்களான சுதர்சன் (வயது 4), மதன்ராஜ் (4), விஷ்ணு (4) ஆகியோர் நேற்று பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த இந்த தின்னர் திரவத்தை குளிர்பானம் என நினைத்து எடுத்து குடித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மைய பொறுப்பாளர் கலைமணி மற்றும் கிராம பொதுமக்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தெள்ளார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.