சட்டவிரோதமாக புழங்கும் போதைப் பொருட்களை தடுக்க, தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டாலும், ஒழிந்தபாடில்லை. கிராமங்களில் ஊடுருவி இருக்கும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் தங்கள் பிள்ளைகள் சீர்கெட்டுப் போவதை கண்டு பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், போதைப்பொருள், மது விற்றதாக வந்தவாசி பகுதியில் அதிரடியாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வந்தவாசி மற்றும் கீழ்கொடுங்காலூர் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, அய்யாவாடி கிராமம் டாஸ்மாக் கடை அருகில், கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வெண்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தியையும் (வயது 27), கள்ளத்தனமாக மது விற்ற சளுக்கை கிராமத்தைச் சேர்ந்த முருகன் (35) ஆகியோரையும் கைது செய்தனர்.
அதேப்போல், பாதிரி கிராமம் ரோடு தெருவில் பங்க் கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த ஏழுமலை (54) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
மும்முனி கிராமத்தில் ஆரணி ரோட்டில் உள்ள தினேஷ் குமார் (30), என்பவருடைய கடையில் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தினேஷ்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
மருதாடு டாஸ்மாக் கடை அருகில், கள்ளத்தனமாக மது விற்ற மருதாடு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (56), வெளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வீரன் (44), சென்னாவரம் ஏரிக்கரையில் கஞ்சா விற்ற வந்தவாசி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (24) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்று, சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை விற்கும் நபர்களை கடுமையான தண்டனை மூலம் சிறையில் அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். சட்டத்தை மீறி, எப்படியாவது போதைப்பொருட்களை விற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் இருப்போருக்கு அச்சத்தை ஏற்படுத்தினால் மட்டுமே போதைப் பொருட்களை ஒழிக்க முடியும் என்கின்றனர் பொதுமக்கள்.