வந்தவாசி ஏரி சுற்றுலா தலமாக மாறுமா? எம்.எல்.ஏ., எம்.பி., கவனத்தில் கொள்ள மக்கள் கோரிக்கை..

வந்தவாசி நகராட்சி எல்லைக்கு அருகில், காஞ்சிபுரம் சாலையை ஒட்டி உள்ள கிராமம்தான் பாதிரி கிராமம். தற்போது, பாதிரி கிராமம், வந்தவாசியுடன் இணைக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பாதிரி கிராமத்திற்கு  2 ஏரிகள் உள்ளன. ஏ ஏரி வடக்கு பகுதியிலும், பி ஏரி மேற்கு பகுதியிலும் அமைந்துள்ளன. பாதிரி கிராமம் வந்தவாசி நகராட்சியுடன் இணைக்கப்படுவதால், நகர எல்லைக்குள்ளேயே பி ஏரியானது வந்துவிடும். 

இந்த பி ஏரி ஒட்டி, பிரதான நெடுஞ்சாலை உள்ளது. வந்தவாசி வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் இந்த சாலையைதான் பயன்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வருவோரும், இந்த சாலை மூலம் தான் வந்தவாசி நகராட்சியை அடைய முடியும்.

இந்த பி ஏரியானது, அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன பயன்பாட்டில் இருந்தது. ஆனால், தற்போது, அருகமை விவசாய நிலங்கள் பெரும்பாலும் பயன்படுத்தாமல் வெறும் நிலங்களாகவே பல ஆண்டுகளாக இருக்கிறது. சில பகுதிகள் மனைகளாக மாற்றப்பட்டிருப்பதால், கட்டட பணிகளும் நடக்கின்றன. இதனால், பல ஆண்டுகளாக இந்த ஏரியில் இருந்து பாசனத்திற்காக நீர் பயன்படுத்தாமலே உள்ளது.

வெறும் காட்சி பொருளாக உள்ள இந்த ஏரி, இயற்கையாகவே நிலத்தடி நீர் அதிகரிக்க உதவினாலும், அதனை சுற்றுலாதலமாக மாற்றி, குழந்தைகள் பூங்கா, நடைபயிற்சி தளம் மற்றும் படகு குழாம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதனால், வந்தவாசி பகுதி மக்களுக்கு தங்கள் பகுதியிலேயே பொழுதுபோக்கு அம்சமாக அமையும் என்றும் பொதுமக்கள் எண்ணுகின்றனர். 

ஏற்கெனவே, ஏரியின் கரை பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனைத் தடுக்க பாதிரி ஊராட்சி சார்பில் அதன் தலைவராக இருந்த அரிகிருஷ்ணன் பல்வேறு தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டார். தற்போது, பதவி காலம் முடிந்த நிலையில், அரசு வசம் நிர்வாகம் இருப்பதால், மீண்டும் கழிவுகளை கொட்டும் சமூக விரோதிகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என மக்கள் கூறுகின்றனர். 

அடுத்து, நகரமயமாக்கல் காரணமாக, ஏரியைச்சுற்றியும், ஏரிக்குள்ளும், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், அதனை தடுக்க ஏரியை பாதுகாப்பதை தவிர வேறு வழியில்லை என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

நகராட்சி நிர்வாகம், சுற்றுலா துறை, பொதுப்பணித்துறை இந்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு, பாதிரி பி ஏரியை ஆக்கிரப்புகள், சுற்றுச்சூழல் கேடு உள்ளிட்டவறில் இருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். 

அதுமட்டுமல்லாது, மக்கள் பிரதிநிதிகளாக உள்ள வந்தவாசி நகரமன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தங்கள் அதிகாரத்திற்குட்பட்டு, ஏரியை சுற்றுலா தலமாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர். 



புதியது பழையவை