திருவண்ணாமலை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 427 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந்துகொள்ளலாம்.
மாதிரி விண்ணப்ப படிவங்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து வட்டாரங்கள் மற்றும் திருவண்ணாமலை மாநகராட்சி, ஆரணி, திருவத்திபுரம் நகராட்சி அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட இணையதள முகவரி https://tiruvannamalai.nic.in-ல் செய்தி, விண்ணப்பம் மாதிரி, இனசுழற்சி வாரியாக காலியிடம் உள்ள பள்ளி சத்துணவு மையங்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்படுபவர் தொடர்ந்து ஓராண்டு காலம் பணியினை முடித்த பின், அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர். தொகுப்பூதியம் மாதம் வீதம் ரூ.3000-ம் ஓராண்டு காலத்திற்கு பின் வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் மாதமொன்றுக்கு ரூ.3000 - ரூ.9000 என்ற விகிதம் ஆகும்.
இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் சரளமாக அனைவரும் கட்டாயமாக எழுதப் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகத்தில் மட்டும் விண்ணப்பிக்க பட வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 30-ந் தேதி மாலை 5.45 மணி வரை ஆகும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.