‘வந்தவாசி கோரைப்பாய்'-க்கு புவிசார் குறியீடு பெற முயற்சி

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் மூலம் வந்தவாசி கோரைப்பாய்க்கு புவிசார் குறியீடு (Geographical Indication - GI tag) பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.



ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகக் கூடிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடு பெறப்படுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த புவிசார் குறியீடு அங்கீகாரம் தனிநபருக்கான உரிமை இல்லை. அந்த பகுதியில் உள்ள அனைவருக்குமான உரிமையாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக திண்டுக்கல் பூட்டு, மதுரை மல்லி, காஞ்சிபுரம் பட்டு ஆகியவற்றை சொல்ல முடியும்.

பல்வேறு விதமான தகவல்களை ஆவணங்களாக சேகரித்து மத்திய அரசிடம் விண்ணப்பித்து, அவர்களும் அதனை ஆராய்ந்து, பின்னர் அதற்கான புவிசார் குறியீட்டை வழங்கி வருகிறார்கள்.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் முயற்சியால் பல்வேறு உள்ளூர் சிறப்பு வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. 

இந்த மன்றம் அந்தந்த பகுதிகளில் புவிசார் குறியீடு பொருட்களை அடையாளம் காணுதல், அதற்கான வரலாற்று சான்றுகள், இலக்கிய சான்றுகளை சேகரித்தல், அதன் பழமை பற்றிய குறிப்புகள் உள்ளிட்டவற்றை சேகரித்து புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பம் செய்வது முதல் அதற்கான சான்றிதழ் பெறும் வரையிலான பணிகளை மேற்கொள்கிறது.

அந்த வகையில் தற்போது வந்தவாசி கோரைப்பாய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் மேற்கொண்டிருக்கிறது. வந்தவாசியைச் சேர்ந்த காயிதேமில்லத் கோரைப்பாய் வியாபாரிகள் சங்கம் மூலம் இந்த விண்ணப்பம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கு புவிசார் குறியீடு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுபோன்ற பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதால், அதன் மதிப்பு உயருகிறது. இன்னும் உற்பத்தியும் அதிகரித்து ஊருக்கும் பெருமை, தயாரிப்பாளர்களுக்கும் வருமானம் கிடைக்கிறது,

புதியது பழையவை