தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் திருவண்ணாமலை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு:
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கல்வி தகுதிகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் நோக்குடன் தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
முகாமில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலை நாடுநர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் கலந்துகொள்ள வேண்டும்.
முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.