திருவண்ணாமலையில் இன்ஸ்டாகிராமில் காதல் ஆசை கூறி, நண்பனுடன் சேர்ந்து காதலியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் காதலன்...
திருவண்ணாமலை நாவக்கரை பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவரான ரூபன் (வயது 26), இன்ஸ்டாகிராமில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தண்டராம்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயதுள்ள இளம்பெண்ணுக்கு காதல் ஆசை கூறி பழகி வந்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, நேரில் சந்திக்க வேண்டும் என ரூபன் அழைத்துள்ளார்.
அவரை நம்பி, கடந்த 7-ந் தேதி திருவண்ணாமலை நாவக்கரை பகுதிக்கு இளம்பெண் சென்றுள்ளார். அப்போது தனியாக சென்று பேசலாம் எனக்கூறி அங்குள்ள தனிமையான இடத்துக்கு ரூபன் அழைத்து சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி வந்திருந்த ரூபனின் நண்பரான தனுஷ் (20) என்பவருடன் சேர்ந்து கட்டாயப்படுத்தி இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ரூபன், தனுஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்டாகிராம் காதலியை நண்பனுடன் சேர்ந்து காதலன் கூட்டு வன்கொடுமை செய்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.