நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்புக்கு எதிராக, முன்னாள் மக்கள் பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை ஒடுக்க தமிழக அரசு திட்டம் என தகவல்

தமிழ்நாட்டில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள சில கிராமங்கள் அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் இணைக்க தமிழக அரசு திட்டமிட்டு, அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், இதற்கு கிராம மக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, மனு கொடுப்பது என பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அரசு சார்பில் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்திலும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்புக்கான காரணங்களை எடுத்து கூறி உள்ளனர். அதுமட்டுமின்றி சிலர் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.



இதுகுறித்து ஜனவ்ரி 29 , 2025 நாளிட்ட தினத்தந்தி நாளிதழில் செய்தி ஒன்று வெளியானது. அதில், இப்போதைக்கு வரி உயர்வு கிடையாது. புதிதாக மாநகராட்சிகளுடன் இணைந்தாலும் 100 நாள் வேலை திட்டம் தொடருவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும்,  தமிழக அரசு, இந்த விவகாரத்தில் சில ஆய்வுகளை செய்துள்ளதாகவும்,  அதன்படி அதில் இயற்கையான மற்றும் செயற்கையான போராட்டங்கள் என வரையறுத்திருப்பதாக அந்த செய்தி பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதில் இயற்கையான போராட்டம் என்பது கிராமப்புற மக்கள் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் என்ற எண்ணத்தாலும், வரி அதிகரிக்கும் என்று கருதுவதாலும் எதிர்ப்பு தெரிவிப்பது.

அதில் செயற்கையான போராட்டம் என்பது, சம்பந்தப்பட்ட கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர் பதவி வகித்தவர்கள், மாநகராட்சி-நகராட்சியுடன் இணைந்துவிட்டால் இங்கு பஞ்சாயத்து தலைவர் பதவி இருக்காது, கவுன்சிலர் பதவி தான் இருக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் போராட்டத்தை தூண்டி விடுவது.

அதன்படி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சில நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தினத்தந்தி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி  “மாநகராட்சி- நகராட்சி ஆகியவற்றில் இணைந்தாலும், அவர்களுக்கு தொடர்ச்சியாக இன்னும் சில ஆண்டுகளுக்கு 100 நாள் வேலை திட்டம் மூலம் வேலை அளிப்பது மற்றும் அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரும் வரை வரித்தொகை உயர்த்தாமல் இருப்பது போன்றவை குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.

அதே போல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளால் செயற்கையாக உருவாக்கப்படும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தினத்தந்தி செய்தித்தாளில் வெளியான செய்தி பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



வந்தவாசி நகராட்சியுடன் கீழ்சாத்தமங்கலம், சென்னாவரம், பாதிரி. அம்மையப்பட்டு, செம்பூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை