தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அநீதி... வந்தவாசியில் திமுக கண்டன பொதுக்கூட்டம்.. எம்.பி. தரணிவேந்தன், எம்.எல்.ஏ. அம்பேத்குமார், துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்பு

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்ததாக கூறி, மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக வந்தவாசியில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வந்தவாசி கோட்டை மூலை பகுதியில், நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில்,  தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார்,  திமுக தலைமை கழக பேச்சாளர்கள் மலர்மன்னன் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் பேசும்போது, தமிழகத்தில் திமுக ஆட்சி தமிழக மக்களுக்கு எண்ணற்ற சாதனைகளை செய்து வருவதாகவும், பள்ளி மாணவ மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி முதல் மகளிர் உரிமைத்தொகை வரை பல்வேறு திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம் என்றும் தெரிவித்தார். 

ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் பேசும்போது, தற்போது ஆண்டு கொண்டிருக்கும் மோடி ஆட்சி, ஒரு மைனாரிட்டி ஆட்சி என்றும், தமிழகத்திலிருந்து திமுக கூட்டணி  எம்பிக்கள் 40 பேர், மோடி ஆட்சியை எதிர்த்து போர் குரல் எழுப்பி , தமிழகத்துக்கான திட்டங்களுக்காக போராடி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், செவி சாய்க்க மறுக்கும் மோடி அரசை தலை சாய்க்க வைக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருவதாகவும், வருங்காலங்களில் அதை சிறப்பாக செய்வோம் என்றும் கூறினார். 

சிறப்புரையாற்றிய சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் கூறியது போல கடந்த ஆட்சி காலங்களில் இரண்டு முறை ஆட்சி செய்த மோடி தன்னிச்சையாக செய்தவைகளுக்கு கடிவாளம் போடும் வகையில், தற்போது எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.  மேலும், இந்தியாவிலேயே மோடி அரசுக்கு பீகாரையும், ஆந்திராவையும் மட்டும் தான் மாநிலங்களாக கண்ணுக்கு தெரிகிறது; மற்ற மாநிலங்கள் எல்லாம் கண்ணுக்கு தெரிவதில்லை; இந்த இரண்டு மாநிலங்களை மட்டும் வைத்துக்கொண்டு மைனாரிட்டி அரசாக மோடி ஆட்சி செயல்பட்டு வருகிறது என்று பேசினார்.


இந்த நிகழ்ச்சியில், திமுக நகர ஒன்றிய இளைஞரணி, மகளிர் அணி, தொண்டர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


புதியது பழையவை