கிராம ஊராட்சிகள், நகராட்சிகளுடன் இணைந்தாலும் 100 நாள் வேலை திட்டம் தொடர, தமிழக அரசு பரிசீலனை என தகவல்...

கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதியுடன் 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. எனவே தமிழக அரசு, இந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புறத் தன்மை வாய்ந்த ஊராட்சிகளை, அருகிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை இணைக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது.

அதாவது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரகப்பகுதிகளும், நகர்ப்புற பகுதிகளுக்கு சமமாக வளர்ந்து வருவதால், அங்கு நகர்ப்புறங்களுக்கு இணையான வகையில் சாலைகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, பாதாளச் சாக்கடை கட்டமைப்பு, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை விரிவுப்படுத்த வேண்டி உள்ளது. ஆனால் சிறிய உள்ளாட்சி அமைப்புகளால் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு தேவையான நிதி இருப்பதில்லை. எனவே தமிழக அரசு அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் இந்த ஊரக பகுதிகளை இணைத்து வருகிறது.

அதன்படி, சென்னை மாநகராட்சி மற்றும் மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

மேலும் வந்தவாசி, திருவத்திபுரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சியை இணைக்கவும், புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகளை அமைக்கவும், அதனுடன் 29 கிராம ஊராட்சிகளை இணைக்கவும் அரசு திட்டமிட்டது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கின. மேலும் இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

ஆனால் சில கிராமங்களில் அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பொதுமக்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து குறை தீர்க்கும் கூட்டத்திலும் பொதுமக்கள் மனு அளித்து உள்ளனர். அதுமட்டுமின்றி சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் உள்ளனர்.


குறிப்பாக, வந்தவாசி நகராட்சியுடன் கீழ்சாத்தமங்கலம், சென்னாவரம், பாதிரி. அம்மையப்பட்டு மற்றும் செம்பூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது. இங்குள்ள விவசாயிகளும் , பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

எனவே தமிழக அரசு, இந்த விவகாரத்தில் சில ஆய்வுகளை செய்துள்ளதாக தினத்தந்தி செய்தி நிறுவனம் இன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி கிராமப்புற மக்கள், 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் என்ற எண்ணத்தாலும், வரி அதிகரிக்கும் என்று கருதுவதாலும் எதிர்ப்பு தெரிவிப்பதால்,   இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சில நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி மாநகராட்சி- நகராட்சி ஆகியவற்றில் கிராம ஊராட்சிகள் இணைந்தாலும், அவர்களுக்கு தொடர்ச்சியாக இன்னும் சில ஆண்டுகளுக்கு 100 நாள் வேலை திட்டம் மூலம் வேலை அளிப்பது மற்றும் அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரும் வரை வரித்தொகை உயர்த்தாமல் இருப்பது போன்றவை குறித்து பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து விரைவில் அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



புதியது பழையவை