வந்தவாசி நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள கிராம ஊராட்சிகளின் கணக்குகளை ஒப்படைக்க ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி உள்ளிட்ட நகராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ள கிராம ஊராட்சிகளின் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் என்று ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

கோப்பு படம்: மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
கோப்பு படம்: மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

வந்தவாசி, திருவத்திபுரம், ஆரணி ஆகிய பகுதியில் உள்ள 14 கிராம ஊராட்சிகளை அந்தந்த நகராட்சிகளுடன் இணைப்பதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஊராட்சிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளீல் மாவட்ட நிர்வாக முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.  பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டமும் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில், செய்யாறு கோட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 

அதில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட கிராம ஊராட்சிகளின் அனைத்து சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளையும், ஊராட்சி பணியாளர்கள் உள்பட சம்பந்தப்பட்ட நகராட்சிகளிடம் இன்று (31-01-2025 வெள்ளிக்கிழமை) ஒப்படைக்க வேண்டும்.

மேலும் அனைத்து ஊராட்சிகளிலும் பராமரிக்கப்பட்ட அனைத்து கணக்குகளின் பட்டியல், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் பட்டியல், ஊராட்சி செயலாளர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊராட்சி பணியாளர்களின் பட்டியலும் எந்தவித விவரமும் விடுபடாமல் சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கு உரிய படிவங்கள் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.

அதன்படி இதனை கண்காணித்து ஒருங்கிணைந்த அறிக்கையை அனுப்பிவிட ஊராட்சிகளுக்கு பொறுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து விவரங்களையும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

புதியது பழையவை