திருவண்ணாமலை மாவட்டத்தில் மானியத்தில் பாமாயில் தோட்டங்கள் அமைக்க விவசாயிகளுக்கு ஆட்சியர் தர்ப்பகராஜ் அழைப்பு விடுத்து உள்ளார்.
இந்திய அளவில் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் பயிர்களில் முதலிடம் பிடிப்பது எண்ணெய் பனையாகும். எண்ணெய் பனை என்பது பாமாயில் தயாரிப்பதற்காகப் பயிரிடப்படும் ஒரு வகை பனை மரம். இது சமையல் மட்டுமின்றி அழகுசாதன பொருட்களாகவும், சில இடங்களில் வேறு சில பொருட்களுடன் கலந்து எரி பொருளாகவும் பயன்படுகிறது. இந்தியாவில் பாமாயில் எண்ணெய் ஒரு ஆண்டிற்கு 23 முதல் 25 மில்லியன் டன் தேவையுள்ளது. இதில் 15 முதல் 16 மில்லியல் டன் மலேசியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே எண்ணெய் பனை பரப்பினை அதிகரிக்கும் நோக்கில் தோட்டக்கலை துறை மூலம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஒரு ஹெக்டேர் நிலத்தில் 9 மீட்டர் இடைவெளியில் 143 மரக்கன்றுகள் நடலாம். இதற்கு ஹெக்டேருக்கு ரூ.29 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. கோத்ரெஜ் அக்ரோவெட் என்ற தனியார் நிறுவனத்துடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளதால் மகசூலை அதே நிறுவனம் பெற்று கொள்கிறது. நடவு செய்த முதலாம் ஆண்டிற்கு ஊடு பயிருக்கு ரூ.5250 மற்றும் பராமரிப்பிற்கு ரூ.5250 அரசு வழங்குகிறது.
மேலும் 2 முதல் 4 ஆண்டு வரை பராமரிப்பிற்கு ரூ.5250 அரசு வழங்குகிறது. ஒரு ஹெக்டேருக்கு 8 டன்னுக்கு மேல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
25 ஆண்டுகளுக்கு நிலையான மாத வருமானம் கிடைக்கிறது. மழை, வெள்ளம், களவு மற்றும் வன விலங்குகளின் சேதம் இல்லை. ஒரு ஹெக்டேருக்கு 6 வருடத்தில் இருந்து 30 முதல் 40 டன் மகசூல் முறையாக பராமரிக்கப்பட்ட பாமாயில் தோட்டங்களில் இருந்து பெற முடியும். ஒரு ஹெக்டேருக்கு 6 வருடத்திற்கு மேல் உள்ள மரங்களில் இருந்து ரூ.2½ லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.
சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கும் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் எண்ணெய் பனை அறுவடை கருவி, அறுவடைக்கு பின் பயன்படுத்தப்படும் ஏணி, எண்ணெய் பனை பயிர் பாதுகாப்பு கம்பி வலை ஆகியவை 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பம் உள்ள விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

