தீபாவளி: திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.24.6 கோடிக்கு மது விற்பனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களில் ரூ.24.6 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் இனிப்பு, பலகாரங்கள் சாப்பிட்டும், அசைவம் சாப்பிட்டும், காலை முதல் இரவு வரை பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மதுபிரியர்கள் மது அருந்தி கொண்டாடினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் 206 மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த கடைகள் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் மது விற்பனை சராசரியைவிட அதிகமாக இருக்கும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் விற்பனை அதிகமாக நடைபெறும் என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் முன்னதாகவே இருமடங்கு மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 18-ந் தேதி முதல் 3 நாட்கள் பிராந்தி, விஸ்கி, பீர் வகைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று உள்ளது. இதில் கடந்த 18-ந் தேதி ரூ.5 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 230-க்கும், 19-ந் தேதி ரூ.9 கோடியே 61 லட்சத்து 63 ஆயிரத்து 915-க்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.

தீபாவளி தினத்தன்று ரூ.9 கோடியே 33 லட்சத்து 55 ஆயிரத்து 85-க்கு மது விற்பனை செய்யப்பட்டது. ஆக மொத்தம் 3 நாட்களில் ரூ.24 கோடியே 62 லட்சத்து 71 ஆயிரத்து 230-க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

புதியது பழையவை