திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. வந்தவாசியில் மட்டும் 60 மி.மீ. மழை பதிவு ஆகியுள்ளது
வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மிதமான மற்றும் பலத்த மழை நேற்று காலை வரையில் விட்டு, விட்டு பெய்தது.
நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையில் அதிக பட்சமாக வெம்பாக்கத்தில் 94 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. செய்யாறு - 67.1, வந்தவாசி - 60, ஜமுனாமரத்தூர்- 59, சேத்துப்பட்டு- 57.6, செங்கம்- 55.4, கீழ்பென்னாத்தூர் மற்றும் ஆரணி- 51.6, கலசபாக்கம்- 50.4, போளூர்- 43.2, தண்டராம்பட்டு- 22.7, திருவண்ணாமலை- 20.
அத்துடன் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கண்காணிப்பில் உள்ள 697 ஏரிகளில் 168 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தெள்ளார், பொன்னூர், மழையூர், கீழ்கொடுங்காலூர், மருதாடு, மும்முனி, வெண்குன்றம், கடைசிகுளம், பாதிரி, அம்மையப்பட்டு, மாம்பட்டு, சென்னாவரம், தென்னாங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட தேரடி பகுதி, பஜார் சாலை, அச்சரப்பாக்கம் சாலை, ஆரணி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மழை நீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் செல்வதுடன், வீடுகளுக்குள்ளும் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
