சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த வாசுதேவன் (வயது 65), சீனிவாசன் (57), இவரது மனைவி அனுராதா (53) ஆகிய மூன்று பேரும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நாவல்பாக்கம் கிராமத்தில் உள்ள கோவில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தனர். கோவிலுக்கு 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொண்டு வந்துள்ளனர். காரை சீனிவாசன் ஓட்டி சென்றுள்ளார்.
நேற்று (அக்டோபர் 17) மாலை 4 மணி வாக்கில், வந்தவாசி அருகே வந்தபோது துணையம்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் இருசக்கர வாகனத்தில் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது கார் நிலைத்தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த சிசிடிவி கேமரா கம்பத்தில் மோதி அங்குள்ள சிறு பாலத்தில் இருந்து கால்வாயில் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
காருக்குள் இருந்த 3 பேரும் சிக்கி கொண்டதில், வாசுதேவன், சீனிவாசன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அனுராதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காரில் இருந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கால்வாயில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால் காரில் இருந்தவர்கள் உயிர்த்தப்பினர்.
விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.