வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் 'பாஸ்டேக்' ஒட்டாவிட்டால் நடவடிக்கை

டோல்கேட் வழியாக போகும் போது, உங்கள் 4 சக்கர வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ‘பாஸ்டேக்' ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு செல்லுங்கள்.. கையில் வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை குறைத்து, சுங்க கட்டண வசூலை துரிதமாக மேற்கொள்ள பாஸ்டேக் எனப்படும் மின்னணு கட்டண வசூல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில், வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும் பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம், வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து சுங்க கட்டணம் தானாகவே பிடிக்கப்படுகிறது.

எனினும், சில வாகன ஓட்டுநர்கள் பாஸ்டேக் ஸ்டிக்கரை கண்ணாடியில் ஒட்டாமல் கையில் வைத்துக் கொண்டு செல்கின்றனர். இதனால், சில சந்தர்ப்பங்களில் சுங்க கட்டணம் செலுத்தாமல் மாற்றுப்பாதையைப் பயன்படுத்தி செல்வதும் நிகழ்கிறது. சுங்கச்சாவடியில் பணியாளர்கள் பிடிக்கும்போது, பாஸ்டேக் கையில் உள்ளது எனக் காட்டி கட்டணம் செலுத்தும் நிலையும் உருவாகியுள்ளது.

இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்படாத பாஸ்டேக் ஸ்டிக்கர்களை ‘கருப்பு பட்டியலில்’ (Blacklist) சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சுங்கச்சாவடி நிர்வாகம் பாஸ்டேக் ஒட்டாத வாகனங்களை குறித்த புகார்களை அனுப்பக்கூடிய மின்னஞ்சல் முகவரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புகார்களின் அடிப்படையில், பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாத வாகனங்களுக்கு நிரந்தர தடையும் விதிக்கப்பட உள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்கி, கண்காணிப்பையும் கடுமையாக்கி வருகிறது.






புதியது பழையவை