ஜூலை 12, சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தேர்விற்கு 9 மணிக்கு மேல் தாமதமாக வரும் எந்தவொரு தேர்வரையும் தேர்வு மையத்தில் அனுமதிக்கக் கூடாது என்று ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குரூப்-4 தேர்வுகள் நடைபெறும் மையத்தின் தலைமை கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு மைய ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கி பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 தாலுகாக்களில் 59 கல்லூரிகள் மற்றும் 115 பள்ளிகள் என 174 தேர்வு மையங்களில் 48 ஆயிரத்து 323 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வின்போது முறைகேடுகள் நடைபெறமால் இருப்பதை கண்காணிக்க துணை ஆட்சியர் முன்னிலையில் 13 பறக்கும் படை அலுவலர்கள், 174 முதன்மை கண்காணிப்பாளர்கள், 53 மொபைல் யூனிட் அலுவலர்கள் மற்றும் 174 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு மையங்கள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் மற்றும் ஆயுதம் ஏந்திய போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு நடைபெறும் நாளன்று எவ்வித மின்தடையும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல ஏதுவாக போதுமான அளவிலான பேருந்துகள் இயக்கிடவும், தேர்வு மையங்களை தூய்மைப்படுத்தி குடிநீர், மின்விளக்குகள், மின்விசிறி, இருக்கைகள், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு நாளன்று தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரையில் தேர்வர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்க வேண்டும். 9 மணிக்கு மேல் தாமதமாக வரும் எந்தவொரு தேர்வரையும் தேர்வு மையத்தில் தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது. தேர்வாளர்களின் புகைப்படம் மற்றும் நுழைவுச் சீட்டினை சரிபார்த்து தேர்வு அறைக்குள் அனுமதிக்க வேண்டும். தேர்வானது காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையில் நடைபெறும். மாற்றுத்திறன் கொண்ட தேர்வர்கள் தேர்வெழுதுவதற்கு தரை தளத்திலேயே தேர்வு அறையினை அமைத்துத் தர வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் நேரம் வழக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கூடத்தில் தேர்வு எழுத வருபவர்கள் எந்தவித மின்னணு உபகரணங்களையும் எடுத்து வரக் கூடாது. கண்காணிப்பாளர் இதனை முறையாக கண்காணிக்க வேண்டும் சரியான நேரத்தில் தேர்வு எழுதுபவர்களை அனுமதிக்க வேண்டும். அனைத்து தேர்வு வழிமுறைகளையும் அனைத்து அலுவலர்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.