திருவண்ணாமலை மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் தொழில் தொடங்கி, வணிக ரீதியில் முன்னேற மாவு அரைக்கும் எந்திரங்களை மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சமூகத்தில் பின் தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெற தமிழ்நாடு அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி இவர்கள் தொழில் தொடங்க ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான எந்திரங்கள் வாங்க மானியத் தொகையாக விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற 25 வயதுக்கு மேல் இருத்தல் வேண்டும். எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களை வருகிற ஜூலை மாதம் 14-ந் தேதிக்குள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதர விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.