தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் கீழ் பயன்பெற உழவர் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்யலாம் என திருவண்ணாமலை மவட்ட வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கமானது தமிழ்நாடு அரசால் 2023-2024-ம் ஆண்டு முதல் 2027-2028 வரை 5 ஆண்டு திட்டமாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்ற சிறுதானியங்களின் உற்பத்தி, பரப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் தொகுப்பு செயல்விளக்கத் திடல் அமைப்பதற்கு 2500 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.6 ஆயிரம் ஹெக்டர் மானியமும், மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தின் மூலம் சிறுதானிய பரப்பை அதிகரிக்க 150 ஏக்கர் இலக்கு அளிக்கப்பட்டு ரூ.1250, ஏக்கர் மானியமும், சிறுதானிய சான்று விதை 300 குவிண்டால் உற்பத்திக்கு ரூ.3 ஆயிரம், குவிண்டால் மானியமும், சிறுதானிய உழவர் குழு உருவாக்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் போன்ற திட்ட கூறுகள் செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 2025-2026-ன் கீழ் பயன்பெற விவசாயிகள் உழவர் செயலி மூலம் பதிவு செய்தும், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தினை அணுகி பயன்பெறலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் கோ.கண்ணகி தெரிவித்துள்ளார்.