திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து புதிதாக செய்யாறு மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று சட்டசபையில் செய்யாறு எம்.எல்.ஏ. ஒ.ஜோதி வலியுறுத்தியுள்ளார்.
சட்டசபையில் மானிய கோரிக்கை மீது விவாதத்தின் போது செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பேசியதாவது:
செய்யாறில் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 8,000 மாணவ மாணவிகள் 2 சுழற்சி முறையில் பயின்று வருகிறார்கள். அதே வளாகத்தில் மகளிருக்கு தனியாக ஒரு கலை கல்லூரி அமைத்துத்தர வேண்டும்.
செய்யாற்றில் அதிக தடுப்பணை கட்டித் தர வேண்டும். வெம்பாக்ககம் வட்டத்தில் உள்ள சுமார் 97 ஏரிகள் காஞ்சிபுரம் உட்கோட்டத்தில் உள்ளதை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றிட வேண்டும்.
வெங்களத்தூர் அருகில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து தர வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மாவட்டத்திலேயே அதிக வருமானம் கொண்ட செய்யாறை தலைமை கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கிட வேண்டும்.
நாவல்பாக்கம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார மருத்துவ மனையாக தரம் உயர்த்திட வேண்டும்.
ஏனாதவாடி, புரிசை, பிரம்மதேசம், அப்துல்லாபுரம் ஆகிய பகுதிகளுக்கு புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்து தர வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்துடன் இணைக்கின்ற வகையில் ஆற்காடு தொகுதி சொரையூரையும், செய்யாறு பகுதி கடுகனூரையும் இணைக்கின்ற வகையில் செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.
திருப்பதியில் இருந்து ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி வழியாக மதுரைக்கு 2 விரைவு பஸ்கள் இயக்கிட வேண்டும்.