உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு சாதனை மகளீருக்கு விருதுகள்...!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக மகளிர் தின விழா அமையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வட்டார கல்வி அலுவலர் இரா.செந்தமிழ் தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், எஸ்.ஆர்.எம் கணினி மைய நிர்வாகி எ.தேவா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் புலவர் மா.மங்கையர்கரசி பங்கேற்று, 'சங்க இலக்கியத்தில் பெண்களின் பங்கு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் மாவட்ட ரெட் கிராஸ் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன் பங்கேற்று, 'பெண் கல்வியின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்த மகளிர் தின விழாவில் வட்டார கல்வி அலுவலர் ஆர்.பிரியா அவர்களுக்கு 'அன்னை தெரசா' விருதும், அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் தி.சாந்தி அவர்களுக்கு 'வீரமங்கை வேலுநாச்சியார்' விருதும், அம்மையப்பட்டு ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை இரா.பெ.ரேவதி அவர்களுக்கு 'சாவித்திரிபாய் புலே' விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவிகளுக்கு புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியைகளுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் பட்டதாரி ஆசிரியர் கோவிந்தராஜன், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ.ஷாகுல் அமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் பட்டதாரி ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.