3 நாட்களுக்கு கனமழை...சாத்தனூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம்... தென்பெண்ணை ஆற்றின்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி நீர்மட்ட உயரம் கொண்டது. இதில் 7321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். சாத்தனூர் அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.



இதைத் தவிர பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் அணையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இங்குள்ள நீர்மின் நிலையம் மூலம் மின்சாரமும் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

தொடர் மழை காரணமாகவும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரிநீராலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலையில் உள்ளது.

வானிலை ஆய்வு மையம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு சாத்தனூர் மற்றும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் எதிரொலியாக அணையின் பாதுகாப்பு கருதி நேற்று காலை 10 மணியிலிருந்து 9 மதகுகள் மூலம் நீர்மின் நிலையம் வழியாகவும் 16 கண் மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றிலும் வினாடிக்கு 2500 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 

வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த வண்ணம் கனமழை பெய்யும் பட்சத்தில் உபரி நீர் வெளியேற்றத்தின் அளவு அதிகரிக்க கூடும். எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோர வாழ் மக்கள் வேறு இடங்களுக்கு செல்லுமாறும் ஆற்றின் தரை பாலங்களை கடக்கும்போது பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை