வந்தவாசியில் நகை திருடிய 2 பேர் திருச்செந்தூரில் கைது

வந்தவாசி அருகே பூட்டிய வீட்டில் 20 சவரன் நகையை திருடிவிட்டு தப்பிய 2 பேர் திருச்செந்தூரில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

வந்தவாசியை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் அங்கயர்கண்ணி. இவர் கடந்த மாதம் 16-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து வந்தவாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். வந்தவாசியில் இருந்து சேத்துப்பட்டு, செஞ்சி, ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட  சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்து பல்வேறு கட்ட விசாரணைகளை செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் போலீசாரால் பல்வேறு வழக்கு சம்பந்தமாக 2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களுடைய புகைப்படங்களை, வந்தவாசி போலீசார் தங்கள் வாட்ஸ் அப் குழுக்களில் பதிவு செய்ததை திருச்செந்தூர் போலீசார் பார்த்து வந்தவாசி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வந்தவாசி போலீசார் பல்வேறு சிசிடிவி ஆதாரங்களை வைத்து ஆய்வு செய்ததில் அங்கயற்கண்ணி வீட்டில் திருடியவர்கள் இவர்கள்தான் என்பது தெரிய வந்தது.

அதில் ஒருவர் கலசபாக்கம் தாலுகா தென்மாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம் (வயது 38). மற்றொருவர் ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்ற அப்பு (28). இதையடுத்து வந்தவாசி போலீசார் திருச்செந்தூர் சென்று இருவரிடமும் விசாரித்தனர்.

அப்போது அங்கயற்கண்ணி வீட்டில் திருடிய நகையை உருக்கி விற்பனை செய்ததில் ரூ.4.2 லட்சம் கிடைத்ததாக தெரிவித்தனர். அந்த பணத்தை போலீசார் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.



புதியது பழையவை

About Me

WhatsApp Button