தலித் விவசாயி நிலத்தில் விளைந்த பயிரை, ட்ரோன் மூலம் கெமிக்கல் அடித்து அழித்த சம்பவம் வந்தவாசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அருங்குணம் கிராமத்தில் பட்டியலின தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை அந்த கிராமத்தைச் சேர்ந்த மாற்று சாதியினர் சிலர் அனுபவித்து வைத்திருந்ததாக தெரிகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தி, அந்த பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைக்கபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த நிலத்தின் தற்போது அனுபவித்து வரும் விவசாயி சுகுமார், உளுந்து பயிரிட்டுள்ளார். பயிர் சாகுபடி அறுவடைக்கு தயாரான நிலையில், நிலத்தை முன்ன்னர் வைத்திருந்த நபர் மிரட்டியதாக கூறி, தெள்ளார் காவல் நிலையத்தில் சுகுமார் புகார் கொடுத்துள்ளார்.
இதனிடையே, விவசாயி சுகுமாரின் நிலத்தில் முன்னாள் உரிமையாளர் ட்ரோன் மூலமாக ரசாயன மருந்துகளை தெளித்துள்ளனர். பயிர் மீது தெளிக்கப்பட்ட மருந்து காரணமாக ஒரு மணி நேரத்திலே பச்சை நிறத்தில் இருந்த பயிர்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில் மாறி சாகத் தொடங்கிவிட்டது.
இந்நிலையில், விவசாயி சுகுமார், குற்றம் செய்த நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். இது குறித்து தெள்ளார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்யாவிடம் கேட்டதற்கு விவசாயி சுகுமாரின் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
தலித் விவசாயியின் நிலத்தில் ரசாயன மருந்து தெளித்து பயிர்களை அழித்த சம்பவம் வந்தவாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அரசு தரப்பில் தெரிவிப்பதாவது, "டி.சி (பஞ்சமி) நிலத்தில் விதிமீறல்கள் நடந்ததால் அதை நத்தம் அனாதீனம் (புறம்போக்கு) என அரசு தரப்பில் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலத்துக்கு, சில ஆண்டுகளுக்கு முன் வைத்திருந்து, வேறொருவருக்கு விற்ற செல்லன் என்பவரின் வாரிசுகள், தற்போது உரிமை கோர முடியாது. அதே கிராமத்தில் உள்ள நிலமற்ற பட்டியல் சாதி மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட நிலங்களைக் காலப்போக்கில் வறுமையின் காரணமாக பட்டியல் சாதி அல்லாத மக்களுக்கு சிலர் விற்றுள்ளனர், விற்றவர்களின் வாரிசுகளுக்கு நிலத்தைக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்த நில பிரச்னையில், இரு தரப்பும் உரிமை கொண்டாட முடியாது. அங்கு சுகுமார் தரப்பினர் விவசாயம் செய்தது தவறு. அந்த நிலத்தை அனுபவித்து வந்தவர்களும் அழித்ததும் தவறு. இரு தரப்பிலும் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.”