நீங்க பி.சி., எம்.பி.சி. ஆ...? பர்சனல் லோன், கறவை மாடு லோன், மகளிர் குழு லோன் விண்ணப்பிக்க வந்தவாசியில் அரசு சார்பில் சிறப்பு முகாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகங்கள் மூலம் கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க சிறப்பு முகாம்கள் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் ஒவ்வொரு ஆண்டும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்களுக்கு தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம், பெண்களுக்கான நுண் திட்டம், புதிய பொற்காலத் திட்டம் மற்றும் கறவை மாடு கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இந்த கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதன் படி, 

வருகிற 22-ந் தேதி திருவண்ணாமலை மற்றும் வந்தவாசி தாலுகா அலுவலகங்களிலும், 

23-ந் தேதி செய்யாறு, போளூர் தாலுகா அலுவலகங்களிலும், 

24-ந் தேதி சேத்துப்பட்டு, கலசபாக்கம் தாலுகா அலுவலகங்களிலும், 

26-ந் தேதி ஆரணி, செங்கம் தாலுகா அலுவலகங்களிலும், 

29-ந் தேதி தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்திலும் 

காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று (சாதிச்சான்று), ஆதார் அட்டை, வருமான சான்று, இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் மற்றும் திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச்சான்றிதழ், மாணவர் என்பதற்கான உறுதிச்சான்றிதழ் கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் ஆகிய சமூகத்தினர் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



புதியது பழையவை