நீண்டகாலமாக கிடப்பில் இருக்கும், வந்தவாசி வழியாக செல்லும் திண்டிவனம் - நகரி ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
திண்டிவனம் - ஆந்திர மாநிலம் நகரி இடையே ரயில் பாதை தொடங்கும் திட்டத்தை மத்திய ரயில்வே இணை அமைச்சராக இருந்த ஆர். வேலு கொண்டு வந்தார். அதன்படி திண்டிவனம்- நகரி இடையே 184.45 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் 2006-2007-ம் ஆண்டிற்கான துணை மானிய கோரிக்கைகளுக்கான அறிக்கையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தினை சுமார் ரூ.583 கோடியில் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2007-ம் ஆண்டு ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
பெரிதாக தொழில்துறையில் வளர்ச்சியில்லாத தமிழகத்தின் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக ஆந்திராவை இணைக்கும் வகையில், திண்டிவனம் - நகரி ரயில்பாதை திட்டம் அமைகிறது. இதனால், மேற்சொன்ன பகுதிகள் வளர்ச்சி காணும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இது நாள்வரை ரயில் தொடர்பு வசதி இல்லாத வந்தவாசி, செய்யாறு, ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா ரோடு மற்றும் சோளிங்கர் ஆகிய இடங்கள் வழியாக அமைக்கப்பட உள்ள இந்த புதிய ரயில்பாதை அந்த பகுதி மக்களுக்கு பெரும் வரப்பிரசாதாம அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், போதிய நிதி ஒதுக்காதது, நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை போன்றவற்றால், பல ஆண்டுகளாக பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது, நிலம் கையகப்படுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாது நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், 347 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், திட்டப்பணி வேகமெடுத்துள்ளது.